என்னிடமிருந்து எதை எதிர்ப்பார்க்கலாம்?

3 Oct

என் அடிப்படைகள் இரண்டு – தமிழ், இயற்பியல்.

இரண்டும் சந்திக்கும் ஒரு புள்ளி – இயற்கை – இதன் இரசிப்பே என் வாழ்க்கை…

புதுக்கவிதையைவிட மரபுக்கவிதை எனக்குப் பிடிக்கும் – படிக்கவும், எழுதவும்!

நான் என் எல்லாக் கிறுக்கல்களையும் கவிதை என மாட்டேன் – வடிகட்டிவிடுவேன்

நான் திருப்திபடுத்த வேண்டிய என் முதல் வாசகன் நானே!

பக்கம்பக்கமாய்க் கிறுக்கித் தள்ளி நூற்றாண்டின் சிறந்த கவி என்று பட்டமோ பெயரோ வாங்க எனக்கு எந்த உத்தேசமும் இல்லை!

என்னைப் படிக்கும் ஆயிரத்தில் ஒருவர் ‘நல்லாயிருக்கு!’ என்று மனதாரச் சொல்லும் அந்த ஒரு விருது போதும் எனக்கு…

மரபில் எளிமை இல்லை என்ற குற்றச்சாட்டைப் பற்றி எனக்குக் கவலை இல்லை – என் மேதாவிலாசத்தைக் காட்ட நான் எளிமையற்று எழுதவில்லை, என் கவிதைகள் பெரும்பான்மையும் தாமாய் அமைவன, அவற்றை பதிந்து வைக்கும் ஒரு பதிவாளனே நான்…

எனக்கும் என் பேனாவிற்கும் அதிக வேறுபாடு இல்லை – இருவருமே கருவிகள்தாம், இயக்கப்படுகின்றோம், இயங்குகின்றோம்!

முன்னோர் ஆண்ட நுண்ணியல்போடு இந்நாள் யாரும் ஆள்கிலர் தமிழை என்று வருத்தம் எனக்கு – அதைத் தணித்துக்கொள்கின்றேன் இயன்ற வரையில் என் கவிதைகளில்…

உமக்காய்க் கவிதை கீழிறங்கி வரும் – நீரும் அதற்காய் மேலெழும்பி வாரும்!

முயன்று பாராமல் முடியாது என்று சொல்லாதீர் – புரிந்துகொள்ள முயன்றுதான் பாருங்களேன் – நிறைய கற்றுக்கொள்வீர் அம்முயற்சியில்…

எதை எழுதுவேன் நான்? சமுதாயத்தைச் சீர்திருத்தும் கவிகளையா? நிச்சயம் இல்லை!

என் துய்ப்பை, என் பார்வையைப் பதிகின்றேன், அவ்வளவே… வரிகள் கவிதைகளாகும் பொழுதில் பொருளோடு உணர்வும் கலக்கும், அதைத்தான் பதிகிறேன்… பதிய முயல்கிறேன்…

வாழ்வதற்கும் எழுதுவதற்கும் இடைவெளி அற்று இருக்க முயல்கிறேன்… மகாகவி பாரதியைப் போல் – அவன் பருந்து, நான் குருவி!

வாருங்கள், என் வாழ்வின் கணங்களை சொற்களில் வடித்துத் தருகிறேன், என்னோடு அந்நொடிகளை வாழ்ந்து பாருங்கள்…

கவிதை என்ற சாலையில் ஒரு புள்ளியிலேனும் நம்மால் சந்திக்க முடிந்தால் அதுவே இப்பயணத்தின் வெற்றி!